மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது ”சேனல்ஸ்” எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் 150 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அப்டேட்ஸ் எனும் ஒரு புதிய டேப் வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடனான சாட்களில் இருந்து தனித்தனியாக அவர்கள் பின்பற்ற விரும்பும் ஸ்டேட்ஸ் மற்றும் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது உரை, ஃபோட்டோர்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒளிபரப்பு கருவியாகும்.
பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( Searchable Directory ) வாட்ஸ் அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி உள்ளூர் செய்திகள், பொழுதுபோக்குகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த அம்சத்தில் சேனல் நிர்வாகி மற்றும் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரப் புகைப்படம் ஃபாலோவர்களுக்கு காட்டப்படாது. அதேபோல, அட்மின் மற்றும் பிற பயனாளிகளுக்கு தனிநபர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. வாட்ஸ்அப் நிறுவனம் சேனல் ஹிஸ்டரியை 30 நாட்கள் வரை தங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கும். பின்தொடர்பவர்களின் சாதனங்களில் இருந்து இன்னும் வேகமாக அப்டேட்கள் அழிந்துவிடுவதற்கான வழிகளைச் சேர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிர்வாகிகள் தங்கள் சேனல்களில் இருந்து ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஃபார்வர்டுகளைத் தடுக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.