டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்பர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு அவ்வப்போது விடுவித்து வந்தது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை, மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-வது கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிப்பது முதல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடுக்கான அனுமதி வரை, முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ஜூன் மாதத்துக்கான ₹16,982 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை அரசாங்கம் செலுத்தும் என்று அறிவித்தார். இத்தொகை ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் உண்மையிலேயே இல்லை என்றாலும், மத்திய அரசு தனது சொந்தநிதியில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் வசூலிக்கப்படும் இழப்பீடு வரி வசூலிப்பில் இருந்துஇத்தொகையை பெற்றுக் கொள்வோம்.இத்தொகையுடன், ஜிஎஸ்டி சட்டத்தில்கூறப்பட்டதுபோல, 5 ஆண்டுகளுக்கான இழப்பீடும் வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், கூடுதலாக, சில பொருட்கள் மற்றும் சேவைகள் மீது பல முக்கிய வரிக் குறைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி, வெல்லப் பாகுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது. ஆனால், வெல்லம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டாலோ, லேபிள் ஒட்டப்பட்டாலோ 5 சதவீத வரி விதிக்கப்படும். கன்டெய்னர்கள் எங்கு செல்கின்றன என்பதை அறிவதற்காக பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகள், டேக்குகள், டேட்டா லாக்கர்களுக்கான 18 சதவீத வரியும் சில நிபந்தனைகளுடன் முற்றிலும் நீக்கப்படுகிறது. பென்சில் சீவும் சாதனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.