அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மேடைக்கு கீழே இருந்த ஒருவர் திண்டுக்கல் சீனிவாசனைப் பார்த்து இதை பேசுங்கள் அதை பேசுங்கள் என அறிவுறுத்திக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ”டேய் மடையா பேசுறத கேளுடா மடையா… சொல்றதை கேளு. அதை சொல்றதுக்கு தான் வந்திருக்கோம். நீங்க அங்க உக்காந்துகிட்டு யோசிக்கிறதை இங்க எனக்கு பேச தெரியாதா..? பாதி பாதியா கேட்டா எப்படி. முட்டாப் பயலா இருக்கியே நீ” என காட்டமாக பேசினார்.
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.300 தரவில்லை. 6 மாத பணம் தரவில்லை. நான் பேசுவதை கேட்காமல், வேறு பக்கம் கவனத்தை வைத்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்படி..? கவனித்து கேளு.. இல்லையென்றால், அங்கே போய் உட்காரு. வம்பு பண்ணிட்டு இருக்கிறீர்கள்” என்று பேசியுள்ளார்.
மேலும், ஓபிஎஸும், தினகரனும் இரட்டை இலையை தோற்கடிப்பதற்காக தேர்தலின்போது, ராமநாதபுரத்தில் பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு போய் நின்றார்கள். அங்கு ஓபிஎஸ் தோல்வியடைந்தார். தினரன் தேனியில் தோற்றார். இவர்கள் இருவராலும் அதிமுகவுக்கு கெட்டப் பெயர் தான். கட்சியை குட்டிச்சுவராக்கி வைத்தனர். எனவே, பொதுக்குழுவுக்கு முன்பாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. மற்றவர்கள் யாராக இருந்தாலும் இருகரம் கூப்பி வரவேற்போம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார்” என பேசினார்.