இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது. நியூசிலாந்து அணியின் ஃபீல்டர் கிளென் பிலிப்ஸ் சுமார் 23 மீட்டர் பாய்ந்து விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதை பார்த்து விராட் கோலியே மிரண்டு போய்விட்டார்.
விராட் கோலி கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த நிலையில், இம்முறை சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் எதிர்பாராத வகையில் ஆட்டமிழந்தார். மாட் ஹென்றி வீசிய பந்தில் கோலி பேக்வேர்ட் பாயிண்டில் ஒரு ஷாட் அடித்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கிளென் பிலிப்ஸ் பாய்ந்து சென்று பந்தை பிடித்தார்.
பொதுவாக நெருக்கமாக நிற்கும் ஃபீல்டர்களால் வேகமாக வரும் பந்துகளை துல்லியமாக கேட்ச் பிடிக்க முடியாது. சில சமயம் பாய்ந்து தடுப்பார்கள். அதுவே சிறந்த ஃபீல்டிங்காக பாராட்டப்படும். ஆனால், பிலிப்ஸ் பாய்ந்த விதமும், துல்லியமாக கேட்ச் பிடித்த விதமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விராட் கோலி இதை நம்ப முடியாமல், சில நொடிகள் நின்று பார்த்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஏன் கோலியை அவுட் செய்தீர்கள்? என்றும் மற்றொரு ரசிகர், கோலி உங்கள் தந்தை என்றும் பதிவிட்டுள்ளனர். பிலிப்ஸின் அக்கவுண்டில் ரசிகர்கள் சரமாரியாக கமெண்டுகளை போட்டனர். ஆனால், அது பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸின் சோஷியல் மீடியா கணக்கு என அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால், இந்த தவறை உணர்ந்த சில ரசிகர்கள், தங்கள் சகாக்கள் பிலிப்ஸை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தினர்.