உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங் (43). இவரது மனைவி மித்லேஷ் (40). இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி வீட்டின் முன்பு தேஜேந்திர சிங் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், தேஜேந்திர சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. தேஜேந்திர சிங் மனைவியிடம் இதுகுறித்து விசாரிக்கையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், தினமும் தேஜேந்திர சிங் குடித்துவிட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, 19 வயது மருமகளை தன்னுடன் படுக்கைக்கு அனுப்பி வைக்குமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவர் மீது மனைவி மித்லேஷ் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தேஜேந்திர சிங், வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மனைவி மித்லேஷ் அரிவாளை எடுத்து வந்த கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மித்லேஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.