காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், ’’ வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் எந்த திசையில் செல்லும், எந்த அளவிற்கு தாக்கம் இருக்கும் போன்றவற்றை தொடர்ந்து கணித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. 16 இடங்களில் மிகக் கனமழை பெய்தது. 108 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 44 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி பகுதிகளில் நிலவுகின்றது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம்-கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்லக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், நாளை மற்றும் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 16ம் தேதி புதிய காற்றழுத்ததாழ்வு பகுதிஉருவாக வாய்ப்புள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.