பொதுப்பணிகளை தனிப்பட்ட ஆதாயங்களுக்காக நிறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மிரட்டியதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் மற்றும் 4 பேர் மீது புகார் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகரும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்பதாலும், பாலம் அமைக்கக் கூடாது என தொழிலாளர்களை மிரட்டியதோடு, ஜே.சி.பி.யையும் பயன்படுத்தி பணியை முடக்கினார்.
விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் மற்றும் 3 பேர் மீது ஐபிசி 147, 341, 353, மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடுதல் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, இது ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அணுகுமுறையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். மனுதாரர் மீது நிலுவையில் உள்ள 27 வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.