அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் முதல் 10 பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார்.. அவரது நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தையும் விரைவில் அதானி இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது..
500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் ப்ளூம்பெர்க் சமீபத்திய உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தில் உள்ளார்.. அவரின் நிகர சொத்து மதிப்பு, 189 பில்லியன் டாலராகும்..
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் 160 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்.. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 124 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.. இந்த பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்த இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி தற்போது 11வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
கடந்த மூன்று வர்த்தக நாட்களில் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு 84.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதே சமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 82.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.. அவர் இப்போது உலகின் 12வது பணக்காரர் ஆவார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரியத் தொடங்கின.. எனினும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், இந்தியாவின் வளர்ச்சி மீதான தாக்குதல் என்றும், அந்நிறுவனம் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது..
கடந்த ஆண்டு அதானியின் நிறுவனங்கள் சுமார் 40 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான லாபத்தைப் பதிவு செய்ததால், அதானி உலகப்பணக்காரர்கள் பட்டியல் முதல் 3 இடங்களுக்குள் நுழைந்தார்.. ஆனால் தற்போது பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் மற்றும் கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் போன்ற பெரும்பணக்காரர்களை விட அதானி பின் தங்கி உள்ளார்..