தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுக்கீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது தவறான செயலாகும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் வில்சன் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டார். தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.
தமிழ்நாடு அரசின் வாதத்தையும், நியாயத்தையும் ஏற்று உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று பேசினார்.