கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (22.11.2023) மற்றும் நாளை (23.11.2023) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.