தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக நாளை (டிசம்பர் 18ஆம் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளைய தினம் அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துகுடி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.