ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. அஸ்வினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம். மற்றொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு ஓணம் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வகையில், செப்டம்பர் 16ஆம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.