விஜயகாந்த் காலமானதையடுத்து அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான மதுரை மாநகரில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி, ஆண்டாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் தந்தையின் அரிசி தொழிலைக் கவனித்து வந்த விஜயகாந்த், நடிப்பு ஆசையில் சினிமாவிற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான மதுரை மேலமாசி வீதி பகுதி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தற்போது இந்த பூர்வீக வீட்டில் விஜயகாந்தின் உடன் பிறந்த தம்பி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் வசித்து வருகின்றனர். வீடு முழுவதும் நிறைந்துள்ள விஜயகாந்தின் இளமைக்கால புகைப்படங்கள் அவரது இளம் வயது வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பெரும்பாலான தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்குக் கிளம்பியுள்ள நிலையில், உள்ளூர் பொதுமக்கள் பலரும் அவரது மதுரை வீட்டிற்கு அருகே குழுமி தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.