திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி ஏ.டி.காலனியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு குழி தோண்டுவதற்காக கிராம மக்கள் சென்றனர். அப்போது மயான பகுதியில் சுமார் 10 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டிருந்தது.
மேலும், அங்கு ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த 6 பிணங்களும் காணாமல் போயிருந்தன. இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அப்பகுதியில் விசாரித்ததில் நள்ளிரவு மயான பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், மண்ணை அள்ளியதுடன் சமாதிகளையும் தோண்டிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மயானத்தில் மண் அள்ளியதை கண்டித்தும், சமாதிகளை தோண்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர், கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் வேடசந்தூர்-எரியோடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read More : பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை..!! உடனே அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவிப்பு..!!