கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கோடைக்காலம் என்றாலே அனைவருக்கும் சற்று பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போவதால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், உடலை குளிர்ச்சியாக வைக்க சாலையோர தர்பூசணி, கம்பங்கூழ், ஜூஸ் கடைகளில் கூட்டம் குவிகிறது. இந்நிலையில் தான், கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி,
➦ பேருந்து நிலையங்கள், உணவகம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் மற்றும் மோர் போதுமான அளவில் இருக்க வேண்டும்.
➦ ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது குடிநீர் அருந்த வேண்டும்.
➦ அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஓஆர்எஸ் பொட்டலங்களை வழங்க வேண்டும்.
➦ பேருந்துகளில் உள்ள ஏர்கண்டிஷன் இயங்குகிறதா..? என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும்.
➦ ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கடுமையான வெப்ப நேரங்களில் போதிய ஓய்வு வழங்க வேண்டும்.
➦ ஒவ்வொரு பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக்குறைவுகளுக்கான மருந்துகள் மற்றும் முதல் உதவி பெட்டிகள் வைக்க வேண்டும்.
➦ ஓய்வு அறைகள், அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் இருக்கும் பழுதடைந்த விசிறிகளை உடனே சரிசெய்ய வேண்டும்.