தெலங்கானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரியாணி சமைப்பதற்காக அரிசியை கழிவறையில் கழுவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா சித்திப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் ஒன்றில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பிரியானி செய்வதற்கான அரிசியை கழிவறையில் அலசியுள்ளனர். இதை அறிந்த வாடிக்கையாளர்கள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது, ஹோட்டலுக்கு தண்ணீர் கொண்டு வரும் மோட்டார் பழுதடைந்துவிட்டதால் தண்ணீர் வரவில்லை. அதனால் ஹோட்டலில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் அதனால் தான் பிரியாணி அரிசியை கழிவறை தண்ணீரில் அலசியதாக தெரிவித்தனர். ஹோட்டல் ஊழியரின் இந்த அலட்சிய பதிலால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஹோட்டல் உரிமையாளர் அலட்சியமாக பதிலளித்ததை பார்த்த நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஹோட்டலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.