வீட்டு மனைப்பதிவுகள் குறித்து புதிய உத்தரவுகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது.
வீட்டுமனை திட்டங்களில் உருவாகும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், இதற்கென பிரத்யேக விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்” செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், முக்கிய உத்தரவு ஒன்றினை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கிறது. அதாவது, குடியிருப்பு மற்றும் வழக்கமான பிரிவின் கீழ் வரும் மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, மார்ச் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த உத்தரவில், “தமிழ்நாட்டில் வீடு, மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்குவோர், அதற்கான ஒப்புதல் பெற்ற பிறகு, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும், இதுவரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
தற்போது, அனைத்து வகை விண்ணப்பங்களையும், ஆன்லைன் முறையில் மட்டுமே பெறுவது என ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகின்றன” என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
Read More : ‘இனி எப்படியோ போங்க’..!! முடிவுக்கு வந்த ADMK – BJP கூட்டணி பேச்சுவார்த்தை..!!