தமிழ்நாட்டில் ஏற்கனவே காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டை பொறுத்தவரை திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, கோவை தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் நிறைய பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு தக்காளி விலை உயர்ந்தபோதே, சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.
தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்றதைபோலவே, ஒரு கிலோ சின்ன வெங்காயமும் ரூ.200 வரை விற்பனையானது. அதற்கு பிறகு சின்ன வெங்காயத்தின் விலை குறைந்தாலும், 100 ரூபாய்க்கு கீழே விற்கப்படவில்லை. ஆனால், இந்த ஒரு வார காலமாகவே, சின்னவெங்காயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற சின்ன வெங்காயம், இப்போது வெறும் ரூ.35-க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயமும் கிலோ ரூ.25-க்கு விற்பதால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கு காரணம், கர்நாடகா மைசூரில் இருந்து வரத்து அதிகமாகிவிட்டதாம். அதனால்தான் விலையிலும் சரிவு காணப்படுவதாக சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே விலை உயர்ந்திருந்ததால், விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயத்தை பயிரிட்டனர். ஆனால், வடகிழக்கு பருவமழை வந்துவிடவும், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தின் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துவிட்டதாக தெரிகிறது. அதேபோல, உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு, மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதும் வெங்காயம் விலை சரிவுக்கு இன்னொரு காரணமாக சொல்கிறார்கள்.
வெங்காய விலை சரிந்துள்ளது, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை உண்டுபண்ணி வருகிறது. அதனால்தான், வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.