எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் தடுத்து வைக்க முடியும்..? என்று அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், டாஸ்மாக் உயரதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டாஸ்மாக் விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் தடுத்து வைக்க முடியும்..? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும் அதை செயல்படுத்திய விதம் தவறு” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக மார்ச் 25ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டதோடு, டாஸ்மாக் அலுவலக சோதனை தொடர்பாக மார்ச் 24ஆம் தேதி அமலாக்கத்துறை உரிய பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.