பண்டிகை காலங்கள் நெருங்கிவிட்டன. பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது. முதலில் எப்படி உருவானது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளி வந்தாலே குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகள், பட்டாசு நினைப்பாகவே இருக்கும், மீசை எட்டி பார்க்கும் டீன்களுக்கு தன் ஆசை நாயகனின் பட ரிலீஸாகுதா என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். பெண்களுக்கு காஸ்மெடிக்ஸ் அல்லது அந்த வருடம் வெளியாகும் புது டிஸைன் ஆடைகள் நினைப்பாகவே இருக்கும். இவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கோ, போனஸ் கிடைக்குமா, வந்தால் எவ்வளவு வரும் என்கிற யோசனையிலேயே தீபாவளி வந்துவிடும்.
இப்படி போனஸை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு, இந்தியாவில் இவ்வழக்கம் எப்படி வந்தது, என்னதான் அந்த வரலாறு என்று தெரிந்துகொள்வோம்.
முதன் முதலில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு போனஸ் என்கிற வார்த்தை பரிச்சயமானது முதலாம் உலகப் போர் சமயத்தில்தான். 1917ஆம் ஆண்டு உலகப் போர் முடிவடைந்து, பிளேக் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது, தொழிலாளர்கள் பலரும் பிளேக் கொள்ளை நோய்க்கு அஞ்சி தொழிற்சாலைகளுக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள் என்று அஞ்சிய குஜராத் – அகமதாபாத்தை சேர்ந்த டெக்ஸ்டைல் நிறுவனங்கள் வார் போனஸ் கொடுத்தன. சம்பளத்தில் 10 சதவீதம் அதிகம் வழங்கியுள்ளன.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது ( வருடத்திற்கு 52 வாரங்கள்). இதையடுத்து, ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமல்படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர். அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள். அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது. பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது. ஆக போனஸ் என்பது விடுபட்ட கொடுக்கப்படாத நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
போனஸ் மற்றும் இன்சென்டிவ் என்ற இந்த இரு சொற்களும் நாம் வேலை செய்யும் இடங்களில் பணப்பயன் குறித்த பேச்சுக்களின் போது அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள்தான். கிட்டத்தட்ட ஒரே பொருளைக் குறிக்கும் இருவேறு சொற்கள் இவற்றின் அர்த்தத்தில் சிறு வித்தியாசமும் உண்டு. இதைப் பற்றித்தான் இப்போது பார்க்க உள்ளோம். இரண்டுமே இழப்பீடு (மாற்றாக வழங்கப்படும் தொகை) அல்லது ஊக்கத்தொகை அல்லது கருணைத்தொகை என்ற ஏதோ ஒன்றை ஒவ்வொரு சமயத்திலும் குறிப்பிடும்.
போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று கூறலாம்.
இன்சென்டிவ் என்பது பணியாளர்களை ஒரு வேலையைச் செய்ய ஊக்கப்படுத்த அல்லது ஒரு இலக்கினை அடைய ஊக்கப்படுத்த நிர்வாகத்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அடுத்தடுத்த ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஊக்கத்தொகை வழங்குவதாகும்.
போனஸ் வழக்கமாக ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இன்செண்டிவ்வில் இத்தகைய ஆச்சரியப்படும் விஷயம் ஏதும் கிடையாது. இன்சென்டிவ்கள் பணியாளர்களை ஒரு வேலையைச் செய்யத் தூண்டி நிர்வாகத்திற்கு உண்மையாக இருந்திட வழங்கப்படுவது. இன்சென்டிவ் ஒரு பணியை முடிக்கும் பணியாளருக்கு உறுதி செய்யப்பட்டது. போனஸ் என்பது ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிக்கு அதை முடித்த பணியாளர் குழுவிற்கு நிர்வாகம் பெற்ற பயனிலிருந்து வழங்கப்படும் ஒரு பரிசுத் தொகை ஆகும்.
இன்சென்டிவ் போனசாக இருக்கலாம். ஆனால் போனஸ் இன்சென்டிவாக இருக்க முடியாது. ஏனென்றால் இன்சென்டிவ் முன்நோக்கிய பார்வையுடன் ஒரு பணியைச் செவ்வனே முடிக்கப் பணியாளரை ஊக்கப்படுத்த வழங்கப்படும், போனஸ் ஒரு பணி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் முதலாளி அல்லது மேலாளர் பணியாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக நினைத்தால் தரப்படும்.