மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மதுரையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் ஆடல், பாடல் உள்ளிட்ட காட்சிகள் நடைபெற்றன. ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் அதிமுக மாநாடு.
சமீபத்தில் நடைபெற்ற சனாதான மாநாட்டில் நான் பேசியது ஐந்து நிமிடம் தான். ஆனால், தற்போது நாடு முழுவதும் அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசாத விஷயங்களை எல்லாம் பேசியதாக பொய்யாக அது உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. என் தலைக்கு விலை வைக்கப்பட்டது. ஆனால், இப்போது சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
நானாவது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இன்று சனாதனத்தை ஒழித்துவிட்டோம் என்று கூறியுள்ளார் செல்லூர் ராஜூ. என் தலைக்கே 10 கோடி ரூபாய் விலை வைத்தார்கள் என்றால், சனாதனம் ஒழிந்துவிட்டது என்று கூறிய செல்லூர் ராஜூவின் தலைக்கு எத்தனை கோடி வைக்கப் போகிறார்கள்? தைரியம் இருந்தால் செல்லூர் ராஜு, அவரது ஓனர்கள் அமித்ஷாவிடம், மோடியிடம் இதை கூறுவாரா? நான் சினிமாவில் இருந்து வந்ததால் விஷயம் தெரியவில்லை எனக் கூறும் செல்லூர் ராஜூ, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்” என்றார்.