Sanchar Saathi: ஆன்லைன் பணமோசடி, செல்போன் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துவரும் இந்த சூழலில், இத்தகைய மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை சார்பில் சஞ்சார் சாதி என்ற இணையதளம் 2023 மே 16 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த இணையதளத்தின் மூலம், தேவையில்லாத அல்லது மோசடி மூலம் இணைக்கப்பட்டுள்ள மொபைல் இணைப்புகளை கண்டறிவதோடு, திருடப்பட்ட/இழந்த மொபைல்களைக் மீட்டெடுக்கவும் முடியும். சஞ்சார் சாதி சேவைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் இணைப்புகளை எவ்வாறு சரிபார்க்கலாம்? சஞ்சார் சாதி இணையதளத்தில், TAFCOP எனப்படும் ‘மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான தொலைதொடர்பு பகுப்பாய்வு’ என்ற வசதியைப் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களது பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை இதில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
OTP எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் மூலம் ஒருவர் தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி இதில் உள்நுழையும்போது, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்டுள்ள மொபைல் இணைப்புகளின் பட்டியலை இந்த சேவை காட்டுகிறது. இதன் மூலம் பட்டியலிடப்பட்டுள்ள எண்கள் அவற்றுடன் தொடர்புடையதா எனப் பயனர் சரிபார்த்துகொள்ள முடியும்.
தேவையில்லாத அல்லது மோசடி மூலம் இணைக்கப்பட்டுள்ள மொபைல் இணைப்புகள் குறித்து புகாரளிக்கவும் TAFCOM சேவை பயன்படுகிறது. இதில் பட்டியலிடப்பட்டுள்ள எண்கள் தங்களுடைய எண் அல்ல என பயனாளர்கள் கண்டறிந்தால், இது குறித்து புகாரளிக்க ‘எனது எண் அல்ல’ என்ற விருப்பத்தை இதில் தேர்வு செய்ய வேண்டும். இது மறு சரிபார்ப்பு செய்து இணைப்புகளை நிறுத்துகிறது. இதன்மூலம் பயனர்கள் தேவையில்லாத இணைப்புகளையும் தடுத்துக்கொள்ள முடியும்.
மையப்படுத்தப்பட்ட உபகரண அடையாளப் பதிவேடு (CEIR) எண் மூலம் திருடப்பட்ட/இழந்த மொபைல்களைக் கண்டறியவும் இந்த சஞ்சார் சாதி இணையதளம் உதவுகிறது. ஏதாவதொரு மொபைல் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, பயனர் தன்னுடைய IMEI எண்களை போர்ட்டலில் சமர்ப்பிக்கலாம். காவலரின் புகாருடன் இந்த விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு திருடப்பட்ட மொபைல் போன்கள் இந்திய நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படுவதை இந்த இணையதளத்தோடு தொடர்புடைய கணினி தடுக்கிறது.
மேலும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் சட்ட அமலாக்க ஏஜென்சிகளுடன் இந்த அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், திருடப்பட்ட/தொலைந்து போன மொபைலை யாராவது பயன்படுத்த முயற்சித்தால், எளிதில் மொபைல் போன்கள் கண்டறியப்படும். மொபைல் போன்கள் மீட்டெடுக்கப்பட்டவுடன், பயனர் இணையதளத்தின் உதவியோடு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.