பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது.. இதற்கான காலக்கெடு வருமான வரித்துறையால் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 31, 2022 வரை கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.. இந்த தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு அவர்களின் பான் எண் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டது..

எனினும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள், 2023, மார்ச் வரை பான் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.. பெரும்பாலான பான் கார்டு பயனர்கள் ஏற்கனவே தங்கள் ஆதாரை பான் உடன் இணைத்துள்ளனர். ஆனால் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் ஏப்ரல் 1ம் தேதி செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. எனவே உங்கள் ஆதார் எண் பான் அட்டையுடன் இணைக்காதவர்கள் கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி இணைக்கலாம்..
ஆதாரை பான் எண்ணுடன் எப்படி இணைப்பது..?
- இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் (https://www.incometaxindiaefiling.gov.in/)
- முகப்புப்பக்கத்தில் ‘Quick Links’ பிரிவின் கீழ் கிடைக்கும் ‘Link Aadhaar’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் PAN, ஆதார் எண் மற்றும் உங்கள் பெயரை உள்ளிட வேண்டிய இடத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- பக்கத்தில் காட்டப்படும் Captcha குறியீட்டை உள்ளிட்டு ‘Link Aadhaar’ பட்டனை கிளிக் செய்யவும்.
ஆதார்-பான் இணைப்பின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்..?
- incometax.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
- ‘Link Aadhaar Status’ விருப்பத்தை தேர்வு செய்யவும்
- உங்கள் PAN மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு, View Link Aadhaar Status’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் உங்கள் திரையில் ஒரு செய்தி தோன்றும்.