பொங்கல் சீசன் வந்துவிட்டது. தற்போது பலரது வீட்டிலும் கரும்பு கண்டிப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரும்பை கடித்து சாப்பிடும் போது வாய்ப்பகுதியில் புண்கள் ஏற்படும். இதனால் மற்ற உணவுகள் சாப்பிட முடியாமல் சில நாட்கள் வரை வலியை ஏற்படுத்தும்.
கரும்பு சாப்பிட்டால் வாய்ப்புண் ஏன் வருகிறது தெரியுமா?
கரும்பில் இயற்கையான சக்கரை மற்றும் ஒரு வகையான அமிலம் இருக்கிறது. இந்த அதிகப்படியான அமிலமும், சர்க்கரையும் நாக்கில் படும்போது வேதி வினைபுரிந்து வாய்ப்பகுதிகள் புண்ணாகி விடுகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறையும், ஒரு சில வீட்டு வைத்திய முறைகளையும் பார்க்கலாம்.
1. கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என்று பலர் கூறி இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதில் உண்மை இல்லை. கரும்பு சாப்பிட்டவுடன் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதனால் கரும்பு சாப்பிட்டவுடன் வாயில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மை குறைந்து வாய் புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
2. கரும்பு சாப்பிட்டவுடன் காரமாகவோ அதிக இனிப்பாகவோ எதையும் சாப்பிடக்கூடாது. இது புண்கள் உருவாக அதிகப்படியான காரணமாகிவிடும்.
3. கரும்பு சாப்பிட்டு முடித்தவுடன் வெதுவெதுப்பான நீரினால் வாயை கொப்பளிக்கலாம்.
4. கரும்பு சாப்பிட்டு வாய் புண் ஏற்பட்டுவிட்டால் இனிப்பு பலகாரங்கள், சாக்லேட், கார உணவுகள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.
5. வாய்ப்புண் அதிகமாகி விட்டாலோ தொண்டை வலி, வயிறு வலி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை பார்த்து மருந்துகள் எடுத்துக் கொள்வது நலம்.