கேரளாவில் காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கைதான காதலி, போலீசில் சிக்கினால் எப்படி உண்மையை மறைப்பது ? என்று தனது குடும்பத்தினருடன் ’பாபநாசம்’ படம் பாணியில் ஒத்திகை பார்த்தது, அம்பலமாகி உள்ளது. விசாரணையில், முதல் கணவனோடு வாழ முடியாது, அவர் இறந்து விடுவார். இரண்டாவது கணவனோடு தான் சந்தோஷமாக வசதியாக வாழலாம் என ஜோதிடர் கூறியதால், ஜாதகத்தை நம்பி காதலனை யாருக்கும் தெரியாமல் தாலிக்கட்ட வைத்து கொன்றதாக, வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் மற்றும் தாய் மாமனையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். போலீசில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்வது என கிரீஷ்மா கூகுள் உதவியுடன் தேடி, அதன்படி காதலனை கொலை செய்ததாக தாய் மாமன் போலீசில் தெரிவித்துள்ளார். குடும்பமாக போலீசாரிடம் மாட்டிக்கொண்டால் போலீசாரின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது ? எப்படி பதிலளிப்பது ? என தாய்மாமனுக்கும், அம்மாவுக்கும் விபரீத பயிற்சி கொடுத்துள்ளார் கிரீஷ்மா.
இதை அடுத்து போலீசார் அம்மாவையும் – தாய் மாமனையும் கிரீஷ்மாவின் வீட்டிற்கு அழைத்து சென்று, வீட்டின் பின்புறம் இருந்த குளத்தில் இருந்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்த பூச்சிகொல்லி மருந்தின் பாட்டில்களை கண்டெடுத்தனர். இதை தொடர்ந்து கிரீஷ்மாவின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். தற்போதும் கிரீஷ்மாவின் அம்மா, மாமா மற்றும் கிரீஷ்மாவிடவும் தொடர்ந்து குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல கிரீஷ்மாவை காப்பாற்ற முயன்றதாக, உள்ளூர் போலீசார் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு பாற சாலை காவல் ஆய்வாளர் ஹேமந்த் என்பவர், தங்களுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு, பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க முடியாது என்று ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை கண்டித்துள்ள அமைச்சர் அந்தோணிராஜ், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.