கோடை காலத்தை முன்னிட்டு இருசக்கர வாகனத்தை வைத்திருப்பவர்கள் அதிக நேரம் வண்டியை வெயிலில் நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இங்கு கார் பயன்படுத்துவோரை விட இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தான் அதிகம். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் பல குடும்பங்களில் வீட்டிற்கு குறைந்தது இரண்டு பைக்குகள் வைத்துள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாகவும், பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89 சதவீதமாகவும் உள்ளன.
தற்போது வெயில் காலம் என்பதால் பைக்குகளை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுகுறித்து இருசக்கர வாகனத்தை பழுது நீக்கும் பீர் முகமது கூறுகையில், “கோடை காலத்தில் பைக்குகளில் சிறு கோளாறு ஏற்பட்டால் கூட அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, வெளிப்புற வெப்பத்தினால் மட்டுமின்றி அதிகப்படியாக வாகனங்களை ஓட்டினால் இன்ஜின் பிரச்சனை ஏற்படும். எனவே, தொலைதூர பயணத்தை தவிர்க்க வேண்டும்.
பைக் டயரை 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், காற்று அளவு குறைவாக இருந்தால் இன்ஜின் அதிக அழுத்தத்தை அடையும் என்பதால் காற்று அளவை சரிப்பார்ப்பது நல்லது. அதேபோல், பெட்ரோல் டேங்க் முழுதாக நிரப்புவதை தவிர்க்க வேண்டும். காரணம், ஏற்கனவே வெளியில் இருக்கும் வெப்பம் அதிகம் என்பதால் முழு டேங்க் நிரப்பினால் உள்ளே காற்று இடைவெளி குறையும் என்பதால், இதை பின்பற்ற வேண்டும். பைக்கை எப்போதும் நிழலில் நிறுத்துவது நல்லது.
வெயில் காலங்களில் அதிக நேரம் வெயிலில் இருப்பதால் பைக் ஓட்டுவதற்கு முன்பாகவே பைக்கின் வெப்பம் அதிகம் இருக்கக்கூடும். சில சமயங்களில் அதிகப்படியான வெயில் காரணமாக தீப்பிடிக்கும் அபாயமும் உண்டு. எனவே, இதனை தவிர்ப்பது நல்லது. இதுதவிர, பைக்கை கவர் மூலம் மூடுவது, பேட்டரில் உள்ள தண்ணீரை சரி பார்ப்பது, பைக் மூலம் தொலைதூர பயணத்தை தவிர்ப்பது போன்றவை கோடை காலத்தில் பின்பற்றினால் எந்தவித பாதிப்பும் இன்றி பயணங்களை மேற்கொள்ளலாம்” என்று கூறினார்.
Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!