தமிழ்நாட்டில் மழை, புயல், வெள்ளங்கள் போன்ற இயற்கை இடர்பாடுகளை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகம் அலர்ட் என்ற செயலியில் பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் டிஎன் – அலர்ட் (TN-Alert) என்ற பெயரில் இருக்கும் செயலியை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் நமது இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்கான அனுமதியை தர வேண்டும். அதன் மூலம் நமது பகுதியில் ஏற்படும் இயற்கை நிலவரங்களை எளிதாக அறியலாம். இந்த செயலியில் இப்போது உங்கள் ஊரில் என்ன வானிலை நிலவுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு, உங்கள் ஊரில் பெய்த மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கும் இடங்கள் உள்ளிட்ட பல தகவல்களை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், வானிலை தொடர்பான விவரங்களில் தங்கள் இருக்கும் இடத்தின் தாலுகா அளவிலான விவரங்கள் இருக்கும். உதாரணமாக நீங்கள் சென்னையில் பள்ளிக்கரணையில் இருந்தால் உங்களது வார்டு மற்றும் உங்களது தாலுகா விவரங்கள் அனைத்தும் இருக்கும். உங்கள் பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் நேர வாரியான தகவல்களையும் அறிய முடியும். அதில், உள்ளே கிளிக் செய்து சென்றால், ஐரோப்பிய வானிலை மையம் மற்றும் இந்திய வானிலை மையம் என 2 பிரிவுகள் இருக்கும்.
அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டால் இப்போது உங்கள் பகுதியின் மழை நிலவரம், மழை குறித்த எச்சரிக்கையை பார்க்க முடியும். மேலும், அடுத்த 4 நாட்களுக்கான மழை குறித்த முன்னறிவிப்பும் அதில் இடம் பெற்றிருக்கும். மழை குறித்து சில ஊடகங்கள் பயமுறுத்தும் வகையிலும், வதந்தியை பரப்பும் வகையிலும், தலைப்புகளை தவறாக வைப்பது நடக்கிறது. இதனால் பதற்றத்திற்கு உள்ளாகும் மக்கள், அச்சத்துடன் இருக்கும் நிலை உருவாகிறது. சென்னை போன்ற ஊர்களில் மழை என்றால் வரமாக பார்க்காமல் சாபமாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை டின் அலர்ட் ஆப்பில் அறிய முடியும்.