சென்னையில் திடீரென வேலையை விட்டு நிறுத்தியதால் மனமுடைந்த பெண், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவரது 38 வயதாகும் நிலையில், கணவர் பால்ராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து தனியாக சென்றுவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இதற்கிடையே, சுமதி கூலி வேலைக்கு சென்று இரு குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 10 மாதங்களாக சுமதி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். ஆனால், ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு ஆண்கள் தேவைப்படுவதால், நீங்கள் நேற்று 7ஆம் தேதியுடன் வேலையை விட்டு நின்று விடுங்கள் என்றும் உங்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரை சில நாட்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அலுவலகத்துக்கு சென்ற சுமதி தனது சம்பளத்தை உடனே தருமாறு கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் நேற்று மார்ச் 7ஆம் தேதி வரச்சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சுமதி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிதி நேரத்தில் மீண்டும் அலுவலகத்திற்குள் வந்து, தான் கையோடு கொண்டு வந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அலுவலக பணியாளர்கள் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுமதிக்கு 62% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் எழும்பூர் நீதிமன்ற 14-வது நீதிபதி தயாளன், சுமதியிடம் மரண வாக்குமூலம் பெற்றார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் நிறுவனத்தில் பணியாற்றும் HR, சுமதி வேலை செய்வதை அடிக்கடி குறை கூறிக்கொண்டே இருந்துள்ளார்.
அவர் கூறியதால் தான், சுமதியை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சுமதி, இவ்வாறு விபரீத முடிவெடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த நிறுவனத்தின் HR இடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.