சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் வசித்து வருபவர் சீராளன். இவரின் வீட்டில் செப்டம்பர் 9ஆம் தேதி செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை, கைலி, கண்ணாடி துண்டுகள், மனித எலும்பு கூடு ஆகியவை மீட்கப்பட்டன. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் இந்த வீட்டில் ஏற்கனவே ஆம்னி பேருந்து ஓட்டுநரான பாண்டியன் வசித்து வந்தார். அவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சென்னையில் வேலை பார்த்து வந்த பாண்டியன், எப்போதாவது தான் தேவகோட்டைக்கு வருவார். இதே போல் 2014இல் தேவகோட்டை வந்த பாண்டி, குடித்து விட்டு மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் பாண்டியின் தலை சுவற்றில் மோதியதில் அவர் உயிரிழந்து விட்டார்.
இதையடுத்து, அவரது உடலை தனது வீட்டின் கழிப்பறை தொட்டியில் சுகந்தி போட்டுவிட்டார். 6 மாதத்திற்கு பிறகு அவர் அந்த வீட்டை விட்டு காலி செய்து விட்டார். அதே நேரத்தில் பாண்டியனை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில் கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் தனக்கு பணம் அனுப்புவதாகவும் சுகந்தி கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், சீராளன் தனது வீட்டின் கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்த போது கிடைத்த எலும்புக்கூடு மூலம் பாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அம்பலமானது. அதன் அடிப்படையில் கணவரை கொலை செய்த காவல்துறையினர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாண்டியனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்த அவரது உறவினர்கள் பாண்டியனின் உடலை சுகந்தி மட்டும் தனியாக செப்டிக் டேங்கில் வீசியிருக்க முடியாது. எனவே சுகந்திக்கு அவரது உறவினர்கள் உதவியிருக்க கூடும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.