RCB VS PBKS: ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு 9.30க்கு தொடங்கியது. மழை பெய்ததன் காரணமாக போட்டி நடைபெறும் சின்னச்சாமி மைதானத்தில் மழை நீர் தேங்கியது. எனவே, இரவு 7.30க்கு தொடங்க வேண்டிய போட்டி தாமதமானது. பின்னர் மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டதை தொடர்ந்து 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசத் தீர்மானித்தது. எனவே பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிலிப் சால்ட் நான்கு பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அர்ஸ்தீப் சிங் பந்தில் அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்கார ருடன் ஜோடி சேர்ந்து ஆடிய விராட் கோலியும் மூன்று பந்துகளில் ஒரே ஒரு ரன்மட்டும் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார். மூன்றாவதாக களம் இறங்கிய ரஜத் படிதார் நிதானமாக விளையாடி 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதேபோல் அடுத்தடுத்து களமிறங்கிய லியாம் லிவிங் ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஆர்பிஐ அதிர்ச்சியில் ஆழ்த்தினர். டிம் டேவிட் நிலைத்து நின்று அதிரடி காட்டினார். 26 பந்துகளில் 50 ரன்கள் விளாசி இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 14 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்தது.
96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், பிரியன்ஷ் ஆர்யா 16 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஹேசில்வுட் பந்துவீச்சில் ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய நேஹால் வதேரா, 18 பந்துகளில் 33 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் டெல்லி, 3வது இடத்தில் குஜராத், 4வது இடத்தில் பெங்களூரு, 5 வது இடத்தில் லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.
Readmore: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. சென்னையில் 20 முதல் 22-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்…! முழு விவரம்