அதானி குழும நிறுவனங்கள் மீது ஹுண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹுண்டன்பர்க். இது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை உண்மைக்கு புறம்பான வகையில் காட்டுவதாகவும் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி அங்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையையும் அதானி நிறுவனம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே நாளில் சரிவை சந்தித்தன. அதாவது ரூ.49 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் கேள்விக்குறியாகின. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஹுண்டன்பர்க் ஆய்வறிக்கையின் படி அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக என்பதை விசாரிக்கும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புக்கு (செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணையை முடிக்காமல் தாமதப்படுத்துவதாக செபி மீது ஓய்வு பெற்ற சாப்ரே குற்றச்சாட்டை எழுப்பினார். உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் செபி விசாரணையை நடத்தவில்லை என்பது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர்கள் தொடர்ந்தனர். இந்நிலையில், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.