வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில் தங்கள் வாழ்வு மாறிவிடாதா? என்று கிராமப் பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளம்பெண்களை குறிவைத்து, அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வேலைதேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் போதிய வேலைவாய்ப்பின்மை அல்லது படித்த படிப்புக்கு வேலை கிடைக்காதவையும் ஒரு சில காரணங்கள்தான். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து தங்களை படிக்க வைத்த பெற்றோரை வீட்டில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டை மறந்து, சொந்தத்தை மறந்து, ஊரை மறந்து இளம்பெண்கள் பலரும் சென்னைக்கு வேலை தேடி வருகின்றனர்.

பொதுவாக இளைஞர்களைப் போல இளம்பெண்களுக்கு அதிக அளவில் செலவுகள் இல்லை. உணவு தங்குமிடம் போன்றவற்றைத் தவிர அநாவசிய செலவுகளை தவிர்த்து வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கிடைக்கும் சொற்ப ஊதியத்தை சேமித்து பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான இளம்பெண்கள் சென்னையில் பல பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் அதுவும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அப்பர் நகர் பகுதியில் வசிக்கும் கணவனும் மனைவியும் சேர்ந்து, சில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி அந்த குறிப்பிட்ட வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு இளம்பெண்களை மிரட்டி அடைத்து வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

குறிப்பாக, வெளியூரில் இருந்து வேலை தேடிவரும் கிராமப்புற பெண்களை குறிவைத்து தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்களை மிரட்டி அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, இளம் பெண்களை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பெண்களுக்கு வேலை தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கணவன் சதீஷ்குமாரையும் அவரது மனைவி சரளாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.