தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 18ஆம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாதவியின் கணவரான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, தன்னுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து என் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக குருமூர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், குற்றத்தை மறைப்பதற்காக வீட்டின் குளியலறையில் வைத்து மனைவியின் உடலை துண்டுத் தூண்டாக வெட்டியுள்ளார். பின்னர், சில உடல் பாகங்களை குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். எலும்புகளை தனியாக பிரித்து, அதை மிக்சியில் அரைத்து, மீண்டும் கொதிக்க வைத்துள்ளார். இப்படி தொடர்ந்து 3, 4 நாட்கள் மனைவியின் உடல் பாகங்களை சமைத்தப் பிறகு, அவற்றை ஒரு பையில் அடைத்து அருகிலுள்ள ஏரியில் கொட்டியுள்ளார்.
மீர்பேட்டையில் உள்ள ஏரியில் வீசப்பட்ட மனைவி மாதவியின் உடல் பாகங்களை இன்னும் போலீசார் மீட்கவில்லை. துப்பு குழுக்களும், நாய் படையும் இன்னும் விரிவான தேடுதலுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். குருமூர்த்தி சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு மாதவியை திருமணம் செய்து கொண்டார். குடும்பம் ஹைதராபாத்தின் ஜில்லெலகுடாவில் வசித்து வருகிறது.
குற்றம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் தம்பதியரின் இரண்டு குழந்தைகளும் குருமூர்த்தியின் சகோதரியைப் பார்க்கச் சென்றுள்ளனர். பின்னர், மனைவி காணாமல் போனதாக நாடகத்தை அவர் உருவாக்கி, அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் இந்த வழக்கு கொலையாக மாற்றப்படும் என்றும், குருமூர்த்தி கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மீர்பேட்டை காவல் நிலைய அதிகாரி கே. நாகராஜு கூறுகையில், “கொலைக்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இன்னும் காணாமல் போனவர் வழக்கு என்று தான் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.