மத்தியப்பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் வசித்து வருபவர் பரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது 40). இவர், ஜூன் 30ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கணவர் பரத் உயிரிழந்த மனைவியை ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்துள்ளார். மனைவி உயிரிழந்ததை தெரிவிக்காமல் கணவர் பரத் உடலை ஃப்ரீசரில் கடந்த 3 நாள்களாக வைத்துள்ளார். சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரிக்கு சந்தேகம் ஏற்படவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பரத் திவாரி வீட்டிற்கு வந்த போலீசார், பெண்ணின் உடல் ஃப்ரீசரில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது சகோதரியின் மரணத்தை கணவர் பரத் மறைத்து வைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவர் அடித்ததால் தான் தன் சகோதரி மரணமடைந்ததாக போலீசாரிடம் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது மனைவி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக கணவர் பரத் கூறியுள்ளார்.
தனது மகன் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், இறுதிச் சடங்கிற்கு மகன் வரவேண்டும் என்பதற்காவே உடலை ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்ததாகவும் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். முடிவில் பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியான பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.