தனது முன்னாள் காதலி மீது கல்லை போட்டு கொலை செய்து முகநூலில் நேரலையில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுா் தாலுகா மலை மாதேஸ்வரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரைச் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவர், பென்னாகரம் பகுதியைச் சோந்த 35 வயதான லட்சுமி என்ற தனது முன்னாள் காதலியை கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்ததை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார். அதில், “என்னை கொலைகாரனாக ஆக்கிட்டியே லட்சுமி, போயிட்டியா, அந்த ஈஸ்வரன் என்னை கொலை செய்ய அனுப்பி வைத்துவிட்டான். நீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கொலை செய்ய வச்சுட்டான்” என்றார். மேலும், “பாருங்க இந்த கல்லைத் தூக்கி போட்டு தான் கொலை செய்தேன். நான் தான் கொலை செய்தேன்” என்று ஆவேசமாக கத்தி நேரலை செய்துள்ளார்.
பின்னர், அங்கிருந்த மரம் ஒன்றில் முனிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்த மலை மாதேஸ்வரா காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். லட்சுமியின் கணவா் ரமேஷ் வெளியூா் சென்றிந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.