தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த சசிகலா, காப்பகத்திற்கு வருகை தந்து மாணவியைப் பாராட்டினார். பின்னர், மாணவி லட்சுமி தனது கால்களால் வரைந்த ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்தார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய அவர், மாணவி லட்சுமிக்கு 5 ஆயிரமும், காப்பக நிர்வாகி ஞானசம்பந்தத்திடம் ஒரு லட்சமும் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக தலைமைக் கழகம் தற்போது சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு நீங்களும் உரிமை கோருவீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து உள்ளதாகத் தெரிவித்தார். தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள்
குற்றம்சாட்டுகின்றனர். முதியோர் உதவித்தொகை மற்றும் மின்வெட்டு ஆகிய பிரதான பிரச்சனைகளை பொதுமக்கள் குற்றச்சாட்டாக தன்னிடம் முன்வைக்கின்றனர். தான் தலைமைக் கழகத்திற்கு கட்டாயம் செல்வேன். தான் வெளியில் செல்வதால்தான் மக்கள் தன்னிடம் குறைகளை கூறுகின்றனர். கட்சி என்று சொல்லக் கூடியவர்கள் உட்கட்சியிலேயே சண்டையிட்டு கொண்டால் பொதுமக்கள் நாளை எப்படி ஓட்டு போடுவார்கள்? என கேள்வி எழுப்பினார். இதனை அவர்கள் நினைக்கவில்லை.
தற்போது உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். தெருக்கடை வியாபாரிகளிடம் அவர்கள் அராஜகப் போக்கை கையாள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும். தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் அதனை சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.