இந்திய சினிமாவுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று 51வது சாட்டர்ன் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டர் அவதார் 2 பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார்.
ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.