‘சென்னையில் வாடகைக்குத்தான் தங்கியுள்ளேன் என்றும் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு இல்லை’ என்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு மட்டுமே குடியிருக்கிறேன். எனக்கு என அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்பட்ட வசதிகள் எதுவும் கிடையாது. என்னுடைய சொந்த ஊரிலேயே எனக்கு இல்லம் இருக்கிறது. சென்னையில் வாடகைக்கு தான் இருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் படிப்புக்காக அடையாறில் வாடகைக்குத் தங்கியுள்ளேன். சொகுசு வசதி, பல கோடி ரூபாயில் வீடு என்பதெல்லாம் தவறான தகவல்” என்றார்.
வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் இரண்டு கைப்பேசிகள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார் விஜயபாஸ்கர்.