தமிழக அரசின் புதிய அமைச்சராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். ஆனால், அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என அப்போதே பேசப்பட்டு வந்தது. 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அவ்வப்போது உதயநிதி அமைச்சராகப் போகிறார் என்ற தகவல் மட்டும் வந்துக் கொண்டே இருக்கும். இதை அமைச்சர்களும் உறுதி செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனால், திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35-வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிகழ்வில் ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என சொல்லும் போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், அவருக்காக தலைமைச் செயலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் அறைகளுக்கு வெளியே அவர்கள் என்ன துறையை சேர்ந்தவர்கள் என பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் அறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்து இந்த துறை உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.