நடிகை ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த அன்பு, பாசத்தை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும், நமிதா என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெலுங்கில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலா கலந்துகொண்டார். ஏற்கனவே கன்னடத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட அவர் தற்போது தெலுங்கில் ஏழாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால், வீட்டுக்குள் சென்ற வேகத்திலேயே வெளியே வந்தார். இந்த சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவர் அளித்த பேட்டியில், “ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவருக்குக்கூட ஒரு பழக்கம் இருக்கும். அப்படித்தான் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம். தெலுங்கு பிக்பாஸில் புகை பிடிப்பதற்கு என்று ஒரு அறை கிடையாது. அதனால்தான் நான் ஆங்காங்கே அமர்ந்து புகை பிடித்தேன். தனியாக அறை இருந்திருந்தால் நான் ஏன் வெளியே உட்கார்ந்து புகை பிடித்திருப்பேன்.
நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சில நாட்கள் முன்பு நான் புகைப்பிடிக்கும் காட்சி மட்டும்தான் ஒளிபரப்பப்பட்டது. அந்த இடத்தில் ஒரு கவர் போடும்படி கோரிக்கை வைத்தேன். ஆனால், அதை செய்யவில்லை. என்னுடைய ஒரே ஃப்ரெண்ட் சிகரெட்தான். 30 வருடங்களாக என்கூடவே இருக்கு. அதை என்னால் விடமுடியவில்லை. நான் ஒருநாளைக்கு நிறைய சிகரெட் பிடிப்பவள். ஆனால், அங்கோ ஒரு நாளைக்கு பத்து சிகரெட்தான் கொடுத்தார்கள். அந்தப் பத்திலும் 3 பேர் என்னிடமிருந்து வாங்கி சிகரெட் பிடித்தார்கள். சிகரெட் கொடுக்கவில்லை என்றால் நான் தூங்கமாட்டேன் என்று அடம்பிடித்துதான் நான் சிகரெட் வாங்கினேன்” என்றார்.