கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று சென்றார். அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலத்திற்கு செல்கிறார். ராமர் சென்ற இடத்துக்கெல்லாம் மோடி சென்றுவிட்டு, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கிறார். மோடி இந்த மாதத்தில் 2-வது முறையாக தமிழ்நாடு வந்துள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஊடக சங்கங்கள் எனக்கு எதிராக கண்டன அறிக்கை கொடுத்து இருக்கின்றன.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கொங்கு பகுதியில் இருக்கும் வழக்காடு மொழியில் பேசினால் அதை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களுக்கு பிரச்சனை அண்ணாமலையின் பேச்சு இல்லை. அண்ணாமலை மீது தான். நான் என்ன பேசுகிறேன் என்பதை உணர்ந்துதான் பேசுகிறேன். நாளையும் இந்த வழக்காடு மொழியைத்தான் பயன்படுத்த போகிறேன். எந்த வார்த்தை சொன்னாலும் வன்மத்தை கற்பித்து வன்மத்தை பார்க்க ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது” என்றார்.