புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (28). லோடுமேனான இவருக்கு ஜனோவா மேரி (26) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிசை வீட்டில் இவர்கள் வசித்து வந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் பிரான்சிஸ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் திடீரென நுழைந்த 2 பேர், பிரான்சிஸ் மீது பெட்ரோல் பாட்டிலை வீசி தீவைத்து கொளுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில், வலி தாங்க முடியாமல் பிரான்சிஸ் அலறி துடித்தார். இதையடுத்து, அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் பிரான்சிஸ் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் பிரான்சிஸ் மனைவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில், பிரான்சிஸ் மனைவி ஜனோவா மேரிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் கணேசன் (26) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் பிரான்சிஸ்க்கு தெரியவந்தபோது, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்களது உறவு தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலுக்கு இடையூறாக இருந்து வரும் பிரான்சிஸை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 5ஆம் தேதி இருவரும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
அப்போது பிரான்சிஸ் வலியால் அலறி துடித்தபோது அக்கம் பக்கத்தினர் வந்ததால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த ஜனோவா, கணேசனை அங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம், 2 பேர் பிரான்சிஸ் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீசார் ஜனவோவையும், கணேசனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.