அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் 28ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்தார்.
இதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி இன்று தெரிவித்தார்.
பின்னர், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகினர். அப்போது ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுக்க ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதி ரவி அறிவுறுத்தினர். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தம்மால் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாட செந்தில் பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளது.