பிக்பாஸ் 7-வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளதால், அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் 10 வாரங்களாக எவிக்ஷனில் இருந்து தப்பித்து இறுதிப்போட்டியை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேற முடிவெடுத்து சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே வீட்டின் நியாபகமாக இருக்கு எனக்கூறிய கூல் சுரேஷ், போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்து வந்தார்.
அவரின் விருப்பப்படியே பெரும்பாலானோர் கூல் சுரேஷை நாமினேட் செய்தனர். இதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தால் வெளியேற்றப்படும் நபராக அவரும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் இப்படி சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கிவிட்டார்.
இதையடுத்து கூல் சுரேஷை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து அவரின் செயலை கண்டித்த பிக்பாஸ், அறிவுரை கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூல் சுரேஷ், இனி இதுபோன்ற செயல்கள் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு சென்றார். பிக்பாஸ் வரலாற்றில் இதற்கு முன் முதல் சீசனில் பரணி இதுபோன்று சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.