நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சீமானுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே, ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை, தமிழிசை உங்களை தீம் பார்ட்னர் என்று கூறி உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தக் கருத்துக்கெல்லாம் சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் தெரிவிக்கவில்லை. பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் சீமானின் கருத்துதானே ஒழிய என்னைப் போன்றவர்களின் கருத்து அல்ல. ‘ஆகச் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்’ என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நாம் தமிழர் கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை.
தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர். நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களின் நாடி நரம்புகளில் உரமேறி இருக்கும் நமது தேசிய தலைவரையும், தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெரிகிறது.
மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்..? வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள். ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை உங்களால் கொண்டுவர முடியவே முடியாது. இனியும் என்னால், தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது. எனவே, உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.