நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பயணிக்க தேர்ந்தெடுப்பது ரயிலைத்தான். ஏனென்றால், இதில் கட்டணம் குறைவு மற்றும் சௌகரியமாக பயணிக்கலாம். மேலும், இந்திய ரயில்வே தொடர்ந்து ரயில் நிலையங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பலரும் இந்த எச்சரிக்கைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ரயில்வே தண்டவாளங்களில் சில முக்கிய இடங்களில் வாகனங்கள் கடந்து செல்வதற்காக ரயில்வே கிராசிங் அல்லது லெவல் கிராசிங் அமைக்கப்பட்டிருக்கும். ரயில்கள் செல்லும்போது ரயில்வே கிராசிங் மூடப்படும். இதன் இருபுறமும் வாகனங்கள் காத்திருக்கும். பின்னர், ரயில் சென்றதும் கேட் திறக்கப்பட்டு, வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஆனால், சிலர் பொறுமை தாங்க முடியாமல், ரயில்வே கிராசிங்கையும் மீறி, வாகனங்களை தள்ளிக் கொண்டு கடப்பது, நடந்து செல்வது என பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில்வே கேட் திறப்பதற்கு முன்பே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், தனது பைக்கை தோளில் தூக்கிக் கொண்டு தண்டவாளத்தை கடந்து மறுபுறம் வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.