அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தனக்கு பதிலாக தனது மனைவியை மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா மாதேனஹள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எச்.எஸ்.பிரகாஷ் என்பவர், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆசிரியர் பணியில் உள்ள பிரகாஷ், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி, ஆசிரியர் பிரகாஷ் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால், தனது மனைவியை, தனக்கு பதிலாக பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி ஆசிரியர் பிரகாஷின் நடவடிக்கையை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்வித்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.