நான் பேசியதில் அதிமுகவை எங்கும் குறிப்பிடவில்லை. பாஜகவின் நிலையை பற்றி மட்டுமே பேசினேன் என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தேர்தலில் தோற்றோம் என கூறினார்கள். ஆனால், இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். இந்த சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியதற்கு நான் பெருமைப்படுகிறேன். இன்று பாஜக இல்லாமல் தமிழக அரசியலே இல்லை என்ற சூழல்நிலை உருவாகியிருக்கிறது. நான் எந்தக் கட்சியையும், எந்தத் தலைவரையும் சிறுமைப்படுத்திப் பேசவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”எங்கே அதிமுகவை பற்றி அண்ணாமலை குறிப்பிட்டார். தவறாக பேசாதீர்கள். அப்படி யார் சொன்னது..?” என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”டிவியில் நடக்கும் விவாதங்களுக்கு அரசியல் விமர்சகரையும், கட்சி சேராதவரையும் அழைத்து வந்து நான் சொன்னதையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து பேசுகிறீர்கள்.
நான் பேசியதில் அதிமுகவை எங்கும் குறிப்பிடவில்லை. பாஜகவின் நிலையை பற்றி மட்டுமே பேசினேன். அதிமுக பற்றி இபிஎஸ் பேசுகிறார். இது நியாயம் தானே. டிவியில் நடக்கும் விவாதங்களை நான் பார்ப்பது கிடையாது. அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுகிறார்களா..? பத்திரிகையாளர்களுக்கு களத்தில் நடப்பது என்னவென்று தெரியும். ஆனால், விவாதத்தில் அமர்பவர்களுக்கு என்ன தெரியும்..? ஏசி அறையில் அமர்ந்து கட்டுரை எழுதுவதை விட அவர்களுக்கு வேறு என்ன தெரியும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.