யூடியூப் பிரபலம் ஜிபி முத்துவுடன் 150 கி.மீ. வேகத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட TTF வாசன், இனி அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் எனவும், என்னை கைது செய்யச் சொல்லி எனது வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விட வேண்டாம் என கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Twin Throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன், பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டன்ட் செய்வது, ரேஸ் செய்வது போன்றவற்றை இவர் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார்கள் உள்ளது. இந்நிலையில், யூடியூபர் TTF வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது. வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போதும் வைரலாகி வருகிறது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் TTF வாசன் பைக்கை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து அவர் பாணியில் கதறி உள்ளார்.

இந்த ஆபத்தான அதிவேக பயணத்தின் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜி.பி. முத்து ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் வரும் மற்றவர்களையும் அச்சுறுத்தும் வகையில் வீயூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு அதிவேகப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அடுத்தடுத்து செய்திகள் வெளியான நிலையில், TTF வாசனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில், தான் இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன்… சரண்டர் ஆகி விடுகிறேன் என வாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு பிரச்சனை வந்த போதே நான் மெதுவாக வண்டி ஓட்ட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், தெரியாமல் இப்படி நடந்து விட்டது. செய்தி சேனல்களுக்கும், மற்றவர்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான்… தெரியாமல் செய்துவிட்டேன். இதற்காக என்னை கைது செய்ய வேண்டும், லைசென்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள். இது என்னை ரொம்ப பாதித்துவிட்டது. இனிமேல் நான் இப்படி வண்டி ஓட்ட மாட்டேன். என்னை கைது செய்து ஜெயிலில் அடைத்து என் வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விடாதீர்கள். நான் செய்தது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.