பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் அடிப்படை உறுப்பினராக வானதி சீனிவாசனின் நேரடி அரசியல் பயணம் 1993 இல் தொடங்கியது. பாஜக சார்பில் இவர் நூற்றுக்கணக்கான போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி இவர் முன்னெடுத்த போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்து அதில் இவர் வெற்றியும் பெற்றுள்ளார். 2013இல் பாஜக மாநில செயலாளர், 2014இல் தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் என்று வானதி சீனிவாசனின் வளர்ச்சி சீரானது. 2020ஆம் ஆண்டு வரை கட்சியின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதல் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவராக பதவி வகித்து வருகிறார்.
2011 மற்றும் 2016 இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைகளில் இவர் போட்டியிட்டுள்ளார். 2016 இல் பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளை பெற்றார். பின்னர், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக போட்டியிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக விஹெச்பி வட தமிழக தலைவராக இருந்து வந்த அவரது கணவர் சீனிவாசன் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசன் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.